Thursday, November 28, 2019

ஆனால்....என்றுமே மறவாதீர்கள்

நாட்களின் பயணிப்பில்
தொய்வில்லை...
நம்மோடு கைகோர்க்கும்
நட்பு மனங்கள் ....
புல்வெளிப் பனித்துளிகளில் 
முகம் பார்த்துக் கொள்கின்றன !
தமிழ் மொழியின் நுகர்வில்
வாழும் காலம்
வளர்ந்து கொண்டே செல்கிறது ...
போதி மரத்து புத்தன்கூட
புன்னகையால்
அரவணைத்து தியானிக்கிறான் !
நொடிப்பொழுதின் நகர்தலில்
நினைவுகளின் கூடாரங்கள் ...
கடைவிரித்துச் செல்கின்றன !
இந்தப் படைப்பின் ரகசியத்தில்
சூட்சுமத்தின் தொடுதிரை
நம் விரல்நுனிகளில் !
மனிதம் தழைக்கும் பூமியில்
இமயம்கூட இடம்பெயரலாம் ....
கங்கையும் தெற்கில் பாயலாம் !
பொதிகைத் தென்றலில்
பாரதியின் பாடல்கள் ...
சாமரம் வீசி உலகெங்கும்
உலாவரலாம் !
மென்பொருள் யுகமதில்
தடம்பதிக்கும் தமிழனின் கரங்களில்
வல்லரசுகளின் ஆளுமை
சரணடையலாம் !
ஆனால்....என்றுமே மறவாதீர்கள்
உலகப் பொதுமறை
திருக்குறளைத் தேசிய நூலாக்க !
......கா.ந.கல்யாணசுந்தரம்

No comments: