Thursday, November 28, 2019

மீளாத சூழலில்...

மீளாத சூழலில்....
****************************************************
எதற்காக இவர்கள் இப்படி
வீணாய் விவாதிக்கிறார்கள் ?
நெறியாளர் என்றே நாளும் 
நடுத்தெரு சண்டையை நடத்துகிறார்கள் !
நிகழ்வுகளின் அலசல்தான்
யார் இல்லையென்றது ?
ஏதொரு முடிவுமின்றி நேரம்கடத்தி
தலைகால் புரியாமல் அந்தரத்தில்
நம்மைத் தொங்கவிட்டுச் செல்கிறார்கள் !
நாளுக்கொரு தலைப்பில்
நாட்டு நடப்பை பிரித்து மேய்ந்தாலும்
அர்த்தமுள்ள அணுகுமுறை
அரிதாகத்தான் இருக்கிறது !
நல்லதையும் தீயதையும்
திசைதிருப்பும் நாடகம்தான் நடக்கிறது !
நடப்பது நடந்துகொண்டுதான்
நாட்களை நகர்த்துகிறது ....!
நினைத்துப்பார்க்கிறேன் ....
அந்நாளைய திண்ணைப் பேச்சுகள்கூட
தீர்வுக்குத் துணையாய் இருந்தன !
ஆனால் இன்றோ திண்ணையை மறந்து
தேடி அலைகிறோம் ...................
மனிதநேய உரையாடலின் வாசம் நுகர !
.............கா.ந.கல்யாணசுந்தரம்

ஹைக்கூ கவிதைகள்

* காற்றில் மிதந்தபடி
இலக்கற்றப் பயணம்
உதிர்ந்த இலைகள்
* உயர உயரப் பறந்தாலும் 
ஊர்க்குருவிதான்
என்றாலும் இலக்குகளோடு
* பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்
இலக்கை நோக்கி
* குறி தப்பினாலும்
இலக்குகளோடு வாழ்வு
கானகத்து வேடர்கள்
* காற்றை எதிர்க்காத
வலுவற்ற அம்புகள்
படைப்பாளனின் பிழை
............கா.ந.கல்யாணசுந்தரம்

ஆனால்....என்றுமே மறவாதீர்கள்

நாட்களின் பயணிப்பில்
தொய்வில்லை...
நம்மோடு கைகோர்க்கும்
நட்பு மனங்கள் ....
புல்வெளிப் பனித்துளிகளில் 
முகம் பார்த்துக் கொள்கின்றன !
தமிழ் மொழியின் நுகர்வில்
வாழும் காலம்
வளர்ந்து கொண்டே செல்கிறது ...
போதி மரத்து புத்தன்கூட
புன்னகையால்
அரவணைத்து தியானிக்கிறான் !
நொடிப்பொழுதின் நகர்தலில்
நினைவுகளின் கூடாரங்கள் ...
கடைவிரித்துச் செல்கின்றன !
இந்தப் படைப்பின் ரகசியத்தில்
சூட்சுமத்தின் தொடுதிரை
நம் விரல்நுனிகளில் !
மனிதம் தழைக்கும் பூமியில்
இமயம்கூட இடம்பெயரலாம் ....
கங்கையும் தெற்கில் பாயலாம் !
பொதிகைத் தென்றலில்
பாரதியின் பாடல்கள் ...
சாமரம் வீசி உலகெங்கும்
உலாவரலாம் !
மென்பொருள் யுகமதில்
தடம்பதிக்கும் தமிழனின் கரங்களில்
வல்லரசுகளின் ஆளுமை
சரணடையலாம் !
ஆனால்....என்றுமே மறவாதீர்கள்
உலகப் பொதுமறை
திருக்குறளைத் தேசிய நூலாக்க !
......கா.ந.கல்யாணசுந்தரம்

Monday, November 4, 2019

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம் 
எதிலும் தமிழே வழங்கக் கேட்போம் 
பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை 
பூமியின் மீது உலவ விடுவோம் 
கங்கை தவழும் இமயம் கடந்து 
கன்னித்தமிழைக் கொண்டு செல்வோம் 
திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில் 
மங்காத தமிழொளி சிந்திடக் காண்போம் 

.......கா.ந.கல்யாணசுந்தரம்