Friday, November 12, 2021

தவறவிட்ட நாட்களின் மணித்துளிகள்

கனவில் பூத்த காகிதக் காளான்களுக்கு குடைபிடித்தபடி நிற்கிறேன் ! முன்னும் பின்னும் நத்தைகள் அணிவகுக்க... சிவப்புநிறக் கம்பளங்களில் அட்டைப்பூச்சியின் கோடுகள் ! குதித்து ஓடும் அணிலிடம் மூன்று கோடுகளைக் கடனாகக் கேட்கிறேன்! இன்றோ நாளையோ உதிரப்போகும் பழுப்புநிற இலைகளில் முகம் பார்க்கத் துடிக்கிறேன் ! ஆமையின் முதுகிலேறிய நத்தைகள் முயலுக்கு முன்னே ஓடுகின்றன... விக்கித்து நிற்கின்ற என்னோடு இரவின் கால்கள் பயணிக்கின்றன ! அதோ தெரிகிறது வற்றிப்போனக் குளத்தருகே நான் தவறவிட்ட.... நாட்களின் மணித்துளிகள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்


Thursday, November 11, 2021

மூன்றடிகளில் மலர்ந்த புறநானூறு - நூல் வெளியீடு

 





பெண்ணியச் சிந்தனையின் உச்சம்

 


பெண்ணியச் சிந்தனையின் உச்சம்

*************************************************
உயிர்ப்புடைய சிந்தனைக்குள்
உண்மைகள் உறைந்துகிடக்க
ஒரு வலைப்பின்னலைப்போல்...
பெண் எனும் மாயை என்னைச்சுற்றியே
கூடாரம் போட்டுத் தவிக்கவிடுகிறது !
ஒடுக்கும் குரலுக்குள் அதிகார ஆண்மை
மிடுக்கு எனும் வேடதாரியாய்
ஓநாய்போல் எனது உரிமைக்குள்
ஓலமிட்டு அடக்கியாள்கிறது...
ஒவ்வாமல் சிக்கித் தவிக்கிறேன் !
இன்னும் திருந்தியபாடில்லை சமூகம்...
அகம் புறம் எனும் ஒழுக்க அணிகலன்களை
கூறு போட்டுக் களைந்தெறிந்து ...
கொக்கரிக்கும் கூட்டம் இன்னமும்
குதூகலமாய் கும்மாளமிடுகிறது !
கூரான எனது விரல் நகங்கள்
எனது மார்பினைக் கிழிக்கத் துடிக்கிறது !
அடைபட்டு என்னிதயக் கூட்டில்
அபயக் குரலெழுப்பி துவளும் பறவைகளை...
சுதந்திரமாய் பறக்கவிடுவேன் என்றேனும் !
……...கா. ந. கல்யாணசுந்தரம்