Wednesday, March 18, 2020

ஹைக்கூ சிந்தனைகள்



ஹைக்கூ சிந்தனைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
*********************************************
* பாசி படர்ந்த படிகள்
குளத்து நீரில் தவளை
வழுக்கி விழும் காட்சி
* தூரத்து மின்னல் கோடுகளில்
நன்றாகத் தெரிகிறது
ஒற்றைப் பனை மரம்
* பொய்க்கால் குதிரையாட்டம்
உயிர்பெற்று எழுகிறது
நாட்டுப்புறக் கலைகள்
* கைகளை மட்டுமே
சுத்தம் செய்கிறது
கிருமி நாசினி
* அடுத்தக்கட்ட நகர்வில்
மாண்டுபோனாலும் மீள்கின்றன
சதுரங்கக் காய்கள்
* ஊர்வலத்தின் முடிவு
தொடக்கமென அறிவிக்கிறது
உணர்வுகளின் குரல்
............கா.ந.கல்யாணசுந்தரம்
Image result for பொய்க்கால் குதிரை

Monday, March 16, 2020

அடர்வனத்து மேடையிலே அரங்கேறுகிறது !












மரங்களின் இடைவெளியில் 
ஊஞ்சலாடும் கிளைகள் 
காற்றடிக்கும் போதெல்லாம் 
உரசிப்பார்த்து மகிழ்கின்றன 
உதிரும் இலைகளில் 
துளிர்த்தலின் முகவரிகள் 
நலம் விசாரிக்கின்றன !


சூரியக் கதிர்களின்  
ஊடுருவலில் உச்சம் தொட்ட 
நிழல்கள் 
வெளிச்ச மொழிகளுக்கு 
மகுடம் சூட்டி 
வனமெங்கும் ஓய்வெடுக்கும்
பறவைகளை வரவேற்கின்றன !


சலசலக்கும் சிற்றருவியில் 
குளித்தபடி குருவிகளின் 
குதூகலத்தில் பங்குபெறும் 
மெல்லிய சாரலில் 
இயற்கையின் வாசம் 
தெம்மாங்கு பாடியபடி 
தென்றலோடு இணைகிறது !


உயர்வு நவிற்சியில்லை  
பிறிது மொழிதலில்லை 
இயற்கையின் 
செப்பலோசையுடன்
இன்னிசை வெண்பாவிங்கு
அடர்வனத்து மேடையிலே
அரங்கேறுகிறது !


……..கா.ந.கல்யாணசுந்தரம்