Monday, November 9, 2020

ஹைபுன்...கா.ந.கல்யாணசுந்தரம்

 

ஹைபுன் - 1
****************
தமிழர்களின் பாரம்பரிய திருமண விழாவில் சிறப்பிடம் பெறுவது மாப்பிள்ளை அழைப்பு. திருமணக் கூடத்துக்கு அருகாமையில் இருக்கும் கோயில் அல்லது சமுதாயக் கூடத்திலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கும். இதில் மாப்பிள்ளைக்கு நலுங்கு வைத்து ஆடை ஆபரணங்கள் வழங்கி அவரை அலங்கார ஊர்தியில் அமர்த்தி சீர்வரிசையுடன் அழைத்துச் செல்வர். ஊர் மக்கள் இந்த ஊர்வலத்தை கண்டு மகிழும்படி இருபுறமும் விளக்குகளை தூக்கிச் செல்வர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்த விளக்குகளை (பெட்ரோமாஸ் ) தலையில் சுமந்து செல்வர். மிகச் சொற்ப ஊதியமே இவர்களுக்கு வழங்கப்படும். குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவேண்டும் என மனிதஉரிமைகள் அமைப்பினர் சொல்லியும் எவரும் சமுதாயத்தில் பின்பற்றுவதில்லை.
மற்றவர்களுக்காக வெளிச்சம் காட்டும் விளக்குத் தூண்களாக இருக்கும் இவர்களின் வாழ்வு வெளிச்சமின்றி இருப்பதுதான் அவலம்....
* வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூக்கிகள்
திருமண ஊர்வலத்தில்
.....கா.ந.கல்யாணசுந்தரம்

Thursday, October 15, 2020

Wednesday, March 18, 2020

ஹைக்கூ சிந்தனைகள்



ஹைக்கூ சிந்தனைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
*********************************************
* பாசி படர்ந்த படிகள்
குளத்து நீரில் தவளை
வழுக்கி விழும் காட்சி
* தூரத்து மின்னல் கோடுகளில்
நன்றாகத் தெரிகிறது
ஒற்றைப் பனை மரம்
* பொய்க்கால் குதிரையாட்டம்
உயிர்பெற்று எழுகிறது
நாட்டுப்புறக் கலைகள்
* கைகளை மட்டுமே
சுத்தம் செய்கிறது
கிருமி நாசினி
* அடுத்தக்கட்ட நகர்வில்
மாண்டுபோனாலும் மீள்கின்றன
சதுரங்கக் காய்கள்
* ஊர்வலத்தின் முடிவு
தொடக்கமென அறிவிக்கிறது
உணர்வுகளின் குரல்
............கா.ந.கல்யாணசுந்தரம்
Image result for பொய்க்கால் குதிரை

Monday, March 16, 2020

அடர்வனத்து மேடையிலே அரங்கேறுகிறது !












மரங்களின் இடைவெளியில் 
ஊஞ்சலாடும் கிளைகள் 
காற்றடிக்கும் போதெல்லாம் 
உரசிப்பார்த்து மகிழ்கின்றன 
உதிரும் இலைகளில் 
துளிர்த்தலின் முகவரிகள் 
நலம் விசாரிக்கின்றன !


சூரியக் கதிர்களின்  
ஊடுருவலில் உச்சம் தொட்ட 
நிழல்கள் 
வெளிச்ச மொழிகளுக்கு 
மகுடம் சூட்டி 
வனமெங்கும் ஓய்வெடுக்கும்
பறவைகளை வரவேற்கின்றன !


சலசலக்கும் சிற்றருவியில் 
குளித்தபடி குருவிகளின் 
குதூகலத்தில் பங்குபெறும் 
மெல்லிய சாரலில் 
இயற்கையின் வாசம் 
தெம்மாங்கு பாடியபடி 
தென்றலோடு இணைகிறது !


உயர்வு நவிற்சியில்லை  
பிறிது மொழிதலில்லை 
இயற்கையின் 
செப்பலோசையுடன்
இன்னிசை வெண்பாவிங்கு
அடர்வனத்து மேடையிலே
அரங்கேறுகிறது !


……..கா.ந.கல்யாணசுந்தரம்