Thursday, December 5, 2019

பரிசல் பெண் !

வெள்ளம் வந்தால்தான்
அவளுக்கு வெள்ளிக்காசுகள்
துடுப்பு ஒன்றினால் பரிசல்
அடுத்த கரைக்கு செல்கிறது
பறந்து அமரும் நீர்ப்பறவைகள்
நலம் விசாரிப்பில் இவளது
அன்றாடத் தோழமை
பருவம் கடந்தும் அவளது
பயணிப்பில் சுவையில்லை
கார்மேகம் சூழும் நாளில்
குதூகலிக்கும் மனதோடு
துடுப்பின் வேகமும் கூடும்
நிலம் மழைத்துளிக்காய்
ஏங்கித் தவிப்பதை
அவ்வப்போது உணர்ந்தவாறே
மற்றவர்களை மட்டுமே
கரையேற்றுகிறாள்
பரிசல் பெண் !
……….கா.ந.கல்யாணசுந்தரம்

ஹைக்கூ கவிதைகள்

* பூட்டப்படாத
இரட்டை மாட்டு வண்டி
ஓய்வெடுக்கும் காளைகள்
* கிணற்றோடு 
மாறாத வடுக்கள்
ஏத்தம் இயக்கிய தடங்கள்
* அறுவடை நாட்களை
நினைவு கூறுகின்றன
அருவாவும் களத்துமேடும்
* பூமிக்குப் பாரமாய்
சாய்ந்து கிடக்கிறது
சாலையோர சுமைதாங்கி
* அம்மன் கோயில் கிழக்காலே
அன்னவயல் மேற்காலே
கைப்பேசி கோபுரம் நடுவாலே
* பாரம்பரிய தெருக்கூத்தை
விழுங்கி ஏப்பமிட்டன
ஆடல் பாடல் நிகழ்வுகள்
.......கா.ந.கல்யாணசுந்தரம்